Skip to main content

Super Tamils

கடத்தப்பட்ட சீனர் சடலமாக மீட்பு… போர்ட் சிட்டி சம்பவத்தில் இருவர் கைது..!

கொழும்பு போர்ட் சிட்டி (துறைமுக நகர) வளாகத்தில் இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோதல், கடத்தல் மற்றும் சீன நாட்டவர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (22) இரவு போர்ட் சிட்டி பகுதியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சி தரும் கடத்தலைத் தொடர்ந்து, காணாமல் போன சீன நபரின் சடலம் எஹெலியகொட – கரந்தன காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குள் வசிக்கும் வெவ்வேறு சீனக் குழுக்களுக்கிடையேயான பகையே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என நம்பப்படுகிறது.

காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில், புதன்கிழமை இரவு 11 மணியளவில் மூன்று சீனர்கள் வாடகை வண்டியில் போர்ட் சிட்டிக்கு வந்துள்ளனர். அங்கே அவர்கள் தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மறுநாள் வியாழக்கிழமை (23) அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் கறுப்பு நிற வேனில் வந்த சுமார் 20 பேர் கொண்ட பெரிய சீனக் குழு அவர்களை திடீரெனச் சூழ்ந்துள்ளது.

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட அந்த மூவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு, முகங்கள் மூடப்பட்டன. பின்னர் இருவரை ஒரு வேனிலும், ‘ஹாவோ சோங்’ என்ற மூன்றாவது நபரை வேறொரு வாகனத்திலும் அந்த மர்மக் கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இதில் கடத்தப்பட்ட இரண்டு சீனர்கள் மட்டும் போர்ட் சிட்டி வாகன நிறுத்தத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அப்படியே கைவிடப்பட்டனர்.

தங்களை எப்படியோ விடுவித்துக் கொண்ட அந்த இருவரும், உடனடியாக நண்பர்கள் உதவியுடன் கொழும்பு துறைமுகக் காவல் நிலையத்தை அடைந்து அதிகாலை 5 மணிக்குத் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று பிற்பகலில் எஹெலியகொட கரந்தன வனப்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டும், கண்கள் மூடப்பட்டும், காயங்களுடன் கிடந்த ஒரு சடலம் மீட்கப்பட்டது. அந்தச் சடலத்தை மறைக்கும் நோக்கில் அதன் மீது கற்களும் அடுக்கப்பட்டிருந்தன. அங்குக் கொண்டு செல்லப்பட்ட தப்பிய இரண்டு சீனர்களும், அது ஹாவோ சோங்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

சடலம் கிடந்த பகுதிக்கு அருகில் ஹாவோ சோங்கைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, அந்தச் சீனர்கள் வந்த சிற்றுந்தைச் சோதித்தபோது, அதற்குள் குண்டுகளுடன் கூடிய Glock 44 துப்பாக்கியும், வோக்கி-டோக்கியும் சிக்கின. இந்த வாகனம் ஹாம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஒருவருடையது என்பதும், மற்றது கொழும்பு 05 நிறுவனப் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த இரண்டு சீனக் குடிமக்களும் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து இலங்கைக்கான சீனத் தூதரகம் மிகுந்த கவலை கொண்டுள்ளதோடு, உண்மையை விரைவாக வெளிக்கொண்டு வந்து சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இலங்கையில் வசிக்கும் அனைத்து சீன நாட்டவர்களும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Police are conducting intensive investigations into a suspected clash and abduction between two Chinese groups at the Colombo Port City complex, which resulted in the discovery of a Chinese national’s body in Eheliyagoda, the arrest of two suspects, and heightened concern from the Chinese Embassy.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்