ஸ்பெயின் தனது இரண்டாவது கால்பந்து உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள நிலையில், பழங்குடித் தன்மையுடன் இந்தியாவின் தொலைதூர கிராமம் ஒன்றில் கால்பந்தாட்டப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த வருடம், கிழக்கிந்திய ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டமான சாய்பாசாவில் உள்ள திரில்பாசா கிராம மக்கள், ஜூலை 14 முதல் ஜூலை 17 வரை ஒரு கால்பந்துப் போட்டியை ஏற்பாடு செய்தனர். இதில் அருகிலுள்ள 64 கிராமங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டித் தொடரில் கணிசமான பரிசுப் பணத்தைத் தவிர, சிறப்பாக விளையாடிய அணிகளுக்கு காஸி இனத்தின் ஆடுகளும் பரிசாக வழங்கப்பட்டன. இறுதிப் போட்டியில், என்.சி.எஸ். மௌடி அணி, கும்பராம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வின்போது, என்.சி.எஸ் மௌடி அணி 15,000 ரூபாய் பரிசுத் தொகையையும், மூன்று காஸி இன ஆண் ஆடுகளையும் வென்றது. இரண்டாம் இடத்தைப் பிடித்த கும்பரம் அணி 12,000 ரூபாய் மற்றும் இரண்டு ஆடுகளையும் வென்றது.
இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் உள்ள ஹோ மக்கள், தமக்கிடையே புதுமையான பழக்கவழக்கங்களை கொண்டிருக்கின்றனர். இதன்படி கால்பந்து விளையாட்டிலும் அவர்கள்,புதுமைகளை புகுத்தியுள்ளனர். இதில் காஸி ஆடுகள் என்பது அவர்களின் கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், அவை பரிசுகளாக வழங்கப்படுகின்றன. பெரும்பாலான அணிகள் தமக்கு பரிசாகக் கிடைக்கும் ஆடுகளை அறுத்துவிடுகின்றன, ஆனால் சில அணிகள் அவற்றை கால்நடைகளாகவும், கிண்ணப் பரிசாகவும் வைத்துக்கொள்கின்றன. இதற்கிடையில் குறித்த பழங்குடியின மக்கள் மத்தியில் காஸி இன ஆடுகள் இல்லாமல், கொண்டாட்டங்கள் நடைபெறுவதில்லை. திருமணங்களில், விருந்தளிப்பவர்கள் கோழிக்கறிகளை பரிமாறினாலும், காஸி இறைச்சி கொடுக்காவிட்டால், அது, கிராம மக்களை வருத்தமடையச் செய்யும் என்று கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.