கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த கடத்தல் தொழில் மூலம் அவர்கள் சம்பாதித்த பல கோடி ரூபாய் பணத்தை, சந்தேக நபரான அந்தப் பெண்ணின் தாயாருடைய வங்கி கணக்குகளில் திட்டமிட்டு வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுமட்டுமன்றி, சட்டவிரோதமான முறையில் சேர்த்த பணத்தைக் கொண்டு, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அத்துருகிரிய பகுதியில் சுமார் 300 இலட்சம் ரூபாய் மதிப்பில் 6 பேர்ச் நிலத்தையும், அதில் ஒரு ஆடம்பர வீட்டையும் அந்தப் பெண் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சட்டவிரோதப் பணத்தில் வாங்கப்பட்ட அந்த வீட்டையும் காணியையும், நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடுத்த 7 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழலில், தலைமறைவாக இருந்த இந்த தம்பதியினரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் சிறப்பு அதிகாரிகள் நேற்று அத்துருகிரிய, ஒருகொட பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த தம்பதியினரில் பெண்ணுக்கு 32 வயதும், ஆணுக்கு 37 வயதும் ஆகிறது என்றும், இவர்கள் இருவரும் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் பணம் பதுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இவர்களது மற்றும் அந்தப் பெண்ணின் தாயாருடைய 6 வங்கி கணக்குகள் குறித்தும், அத்தோடு சந்தேக நபரான ஆணின் பெயரில் வாங்கியுள்ள ஒரு சொகுசு கார் குறித்தும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தற்போது ஆழமான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
The Illegal Assets Investigation Division in Colombo has seized the property and frozen the bank accounts of a couple from Borella who accumulated wealth through drug trafficking using instant money transfer methods since 2017. Following a detailed investigation, the police arrested the 32-year-old woman and 37-year-old man in Athurugiriya, subsequently freezing a luxury house and land worth 300 lakh rupees purchased with illicit funds, while continuing to investigate six linked bank accounts and a luxury vehicle.