கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி அரங்கேறிய இந்த பாரிய திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் பயனாக, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (22) பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், திருடப்பட்ட தங்கச் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மறைத்து வைத்திருந்தது மற்றும் அவற்றை விற்பனை செய்ய முயன்றது குறித்த தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்தத் திருட்டில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 62 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள மூன்று கைக்கடிகாரங்கள், ஒரு ஜோடி தங்கக் காதணிகள், 2 மில்லியன் ரூபாய் மதிக்கத்தக்க வைர மாலை மற்றும் இரண்டு வாசனைத் திரவிய போத்தல்கள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
பிடிபட்ட ஆண்களின் வயது 19 முதல் 40 வரை என்றும், பெண் சந்தேகநபர் 29 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
Six suspects, including a woman, were arrested by Narahenpita Police for stealing over 16 million rupees worth of property from a house. Following the initial arrest of a suspect with narcotics and stolen jewelry, further investigations led to the recovery of high-value items, including luxury watches and a diamond necklace worth 2 million rupees.