விஜய் சி. ஜோசப் தமிழ்நாடு முதலமைச்சர், தனது தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை இன்று மேற்கொள்கிறார்.
இதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதி மக்களுக்காகப் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் திறந்து வைக்கிறார்.
வியாசர்பாடி பகுதியில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இந்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வந்து செல்லும் வகையில் அனைத்து நவீன வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நேரடியாக இந்த அலுவலகத்திற்குச் சென்று, தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் மனுக்களாகக் கொடுத்து தீர்வு காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த சுமார் 45,000 பயனாளிகளுக்குப் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை முதலமைச்சர் விஜய் வழங்கவுள்ளார்.
இதன் மூலமாக, தகுதியுடைய ஏழை எளிய மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எவ்வித தடையுமின்றி எளிதாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு ஒரு முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் மாற்றும் நோக்கிலேயே இந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is launching several public welfare initiatives in his Perambur constituency today, including the inauguration of a modern, disabled-friendly MLA office on Erukanchery High Road and the distribution of smart ration cards to 45,000 beneficiaries to ensure smooth access to essential commodities.