2026ஆம் ஆண்டுக்கான Numbeoவின் இடைக்கால அறிக்கையின்படி உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தரவுத் தளமான Numbeo வெளியிட்டுள்ள புதிய போக்குவரத்து குறியீட்டில், இலங்கை 254.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மோசமான பட்டியலில் 320.3 புள்ளிகளைப் பெற்று நைஜீரியா முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள முதல் 10 நாடுகளின் வரிசையில் பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பொதுமக்களிடம் இருந்து நேரடியாகப் பெறப்படும் தகவல்களைக் கொண்டுதான் Numbeo இந்த போக்குவரத்து பட்டியலைத் தயாரிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்து சூழலை மதிப்பிடுவதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
முதலாவதாக, ‘நேர செலவீட்டு குறியீடு’. அதாவது ஒரு பயணி தனது ஒரு வழிப் பயணத்திற்காக 25 நிமிடங்களுக்கும் அதிகமாகச் செலவிடும் போது, அவருக்கு ஏற்படும் சோர்வும் மன உளைச்சலும் இதில் கணக்கிடப்படுகிறது.
அடுத்ததாக, ‘திறமையின்மை குறியீடு’. மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு, தங்களது சொந்த வாகனங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் வீதிகளில் ஏற்படும் நெரிசலை இது சுட்டிக்காட்டுகிறது.
மூன்றாவதாக, ‘CO2 வெளியேற்ற குறியீடு’. ஒவ்வொரு பயணியும் அன்றாடப் பயணங்களின் போது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வளவு காபனீரொட்சைட்டை வெளியேற்றுகிறார்கள் என்பதை இது மதிப்பிடுகிறது.
இலங்கையின் தற்போதைய நிலைமை கவலையளிப்பதாக உள்ளதாகவும், நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உடனடியாக நவீனமயப்படுத்தி மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதையும் இந்தத் தரவுகள் தெளிவாகக் காட்டுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
According to Numbeo’s mid-year 2026 traffic index, Sri Lanka has been ranked as the world’s third worst country for traffic congestion, following Nigeria and Costa Rica. The index, which is based on user-contributed data, evaluates nations using metrics such as time consumption during commutes, traffic inefficiency due to high private vehicle usage, and carbon dioxide emissions, emphasizing the urgent need for Sri Lanka to upgrade its public transportation system.