இலங்கை போக்குவரத்து சபைக்கு புதியதாக 600 பேருந்துகளை இணைக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடுமையாக சாடியுள்ளது.
இந்தத் திட்டம் தனியார் பேருந்துத் துறையை அதளபாதாளத்தில் தள்ளும் ஒரு மாபெரும் தவறு என்று அந்த அமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 பேருந்துகள் வழங்கப்படுவதை எங்களது சங்கம் எதிர்க்கவில்லை. ஆனால், வெறும் பேருந்துகளை மட்டும் கணக்கிற்காக சேர்ப்பதால் அரசு நடத்தும் போக்குவரத்து சேவையில் இருக்கும் நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் தீர்ந்துவிடுமா என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இன்றளவும் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளில் பெரும்ப பங்கை தனியார் பேருந்துகள்தான் தாங்கிப்பிடித்து வருகின்றன. எந்தவித முறையான சாத்தியக்கூறு ஆய்வுகளும் செய்யாமல் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து எண்ணிக்கையை அதிகரிப்பது, அப்பாவித் தனியார் பேருந்து உரிமையாளர்களின் வயிற்றில் அடிப்பதாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை போக்குவரத்து சபை ஒவ்வொரு நாளும் 20 மில்லியன் ரூபா வரை நஷ்டத்தை சந்தித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. எனவே, மேலும் மேலும் புதிய பேருந்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாமல், தற்போதைய அரச போக்குவரத்து முறையில் இருக்கும் ஓட்டைகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அரச பேருந்து சேவைகளின் இந்த அதீத விரிவாக்கம் காரணமாக எழும் பிரச்சினைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்தும் எமது சங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
The Private Bus Owners’ Association, led by Gemunu Wijeratne, has strongly criticized the government’s plan to introduce 600 new buses to the Sri Lanka Transport Board (SLTB), calling it a detrimental move that threatens the private bus industry amidst ongoing financial losses in the state sector.