ரஷ்யா நேற்று (29) யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
யுக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள இந்த கொடூரமான தாக்குதலை அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஸெலன்ஸ்கி வன்மையாகக் கண்டித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு “பயங்கரவாதச் செயல்” இது என அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யப் படைகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களால் யுக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் எனப் பலவும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 29 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜபோரிஜியா நகரின் மீது ரஷ்யா நடத்திய துரோகத்தனமான ஆளில்லா விமானத் தாக்குதலில் பிஞ்சு குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்; மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுமட்டுமன்றி, வடக்கு சுமி பிராந்தியத்தில் ரஷ்யா வீசிய குண்டுகளுக்கு 69 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், 77 வயது முதியவர் ஒருவரும் பலியாகியுள்ளனர் என்ற சோகமான செய்தியும் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த திடீர் அத்துமீறல்களால் யுக்ரைனின் குறைந்தது 6 மாகாணங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாகவும், பெரும் உயிர்ச்சேதமும் பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளதாகவும் யுக்ரைன் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
At least 12 people were killed and over 40 injured following intense Russian airstrikes targeting various regions across Ukraine, including Dnipropetrovsk, Zaporizhzhia, and Sumy. Ukrainian President Volodymyr Zelensky strongly condemned the attacks, describing them as a horrific strike intentionally aimed at civilians, which has left residential areas and critical infrastructure heavily damaged.