உலகம் இதுவரை பல ஆவணக் கசிவுகளைப் பார்த்திருந்தாலும், ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்பது ஒட்டுமொத்த உலகப் பிரபலங்களையும் உலுக்கியெடுத்துள்ளது. இதில் வெறும் அரசியல் விவரங்கள் மட்டுமல்லாமல், சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் பலரின் ஒழுக்கக் கேடுகளும் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக, கடத்தப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களுடனான பாலியல் தொடர்புகள் இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
யார் இந்த எப்ஸ்டீன்? சாதாரண பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, பின்னாளில் பெரும் பாலியல் இடைத்தரகராக மாறியவர் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன். 2015-ல் வர்ஜீனியா கிஃபர் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் கடத்தலில் ஈடுபட்ட எப்ஸ்டீன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 2019-ல் அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதை அடுத்து வழக்குகள் கைவிடப்பட்டன. இருப்பினும், இந்த விவகாரத்தின் பின்னணியை அறிய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களில் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளின்டன், டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ எனப் பல ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபடுகின்றன. எலான் மஸ்க் உள்ளிட்ட சிலர் இதை மறுத்தாலும், கசிந்துள்ள மின்னஞ்சல்கள் மற்றும் பயணப் பதிவுகள் பலரது ரகசியத் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தவறுதலாக இடம்பெற்றதாகக் கூறி சில ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி பெயர்கள் சில மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இது ஒரு குற்றவாளியின் அபத்தமான பேச்சு என இந்திய வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதற்கிடையில், இந்த ஆவணங்களைக் கொண்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உலக வரலாற்றில் ஒரு ஆவணக் கசிவு இத்தனை பெரிய அரசியல் மற்றும் பொருளாதார அதிர்வுகளை ஏற்படுத்துவது இதுவே முதல்முறை.
_________________________________________________________________________________________________
The “Epstein Files,” a massive leak of 30 million pages of documents, has exposed the alleged involvement of high-profile global figures—including politicians, tech giants, and royalty—in Jeffrey Epstein’s sex trafficking ring. While the leaked emails and travel logs have implicated figures like Elon Musk, Bill Gates, and Bill Clinton, the controversy has also reached India, sparking a political row between Rahul Gandhi and the BJP over the mention of Prime Minister Modi’s name. Despite the Indian government dismissing these claims as absurd, the leak continues to cause significant geopolitical and domestic ripples.