Skip to main content

Super Tamils

பல பகுதிகளில் இடிமின்னலுடன் மழை…! 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளையில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறான வானிலை நிலவக்கூடும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மழையின்போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய மலைநாட்டில் தொடரும் மழையினால் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், வாகனச் சாரதிகள் வீதிகளில் பயணிக்கூடும் போது மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதனிடையே, பொகவந்தலாவ பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாகத் தாழ்நிலப் பகுதிகளில் அமைந்துள்ள பல தோட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை மாவட்டத்தின் பசறை, கண்டி மாவட்டத்தின் மினிப்பே, உடுதும்பறை, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கண்டி மாவட்டத்தின் உடபலாத, கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, ரம்புக்கனை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, வெலிகேபொல, அயகம ஆகிய பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளைய தினமும் வட, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை வழக்கத்தை விடக் கூடுதலாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய மட்டத்தில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்