இத்தாலியை மையமாகக் கொண்டு இலங்கையில் உள்ள பிரபல வர்த்தகர்களை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட பாரிய கொக்கைன் கடத்தல் வலையமைப்பு ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பாக சீதுவை பகுதியில் உள்ள பிரபல உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சுமார் 500 கிராம் கொக்கைனுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கட்டானை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 25 வயதுடையவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில், இத்தாலியில் வசிக்கும் ‘தினேஷ்’ என்ற வர்த்தகர் ஒருவர் இந்தக் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. வானூர்தி நிலையம் ஊடாக இலங்கைக்கு கடத்தப்படும் கொக்கைன், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்தர உணவகங்களின் வாகன நிறுத்துமிடங்களில் வைத்து பிரபல வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஒருவரின் வங்கிக் கணக்கின் ஊடாக மாத்திரம் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது. போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் 30-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு, பின்னர் சட்டவிரோத பணச் சலவை முறைகள் மூலம் முறையான வர்த்தகப் பரிவர்த்தனைகள் போன்று காண்பிக்கப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இத்தகைய நிதிப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 25 வங்கிக் கணக்குகள் குறித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.