போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே GovPay செயலி மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்து கொடுக்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் டப்ளியூ பீ.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்ட விபரங்கள் இதோ:
இதற்கு முன்பு, வாகன ஓட்டிகள் தங்களின் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக நீண்ட நேரம் அலைந்து திரிந்து, தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டிய நிலை இருந்தது. இந்தச் சிரமங்களைக் குறைக்கும் நோக்கிலும், அபராதம் செலுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்து பொதுமக்களின் நேரத்தையும் தேவையற்ற பண விரயத்தையும் மிச்சப்படுத்தும் நோக்கோடும் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் GovPay மூலம் அபராதம் செலுத்தும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இது குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களும், இந்த புதிய முறையை அமுல்படுத்தும் பணிகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, இந்தச் சேவையை எவ்வித தடையுமின்றி மேற்கொள்வதற்காக லங்காபே (Lankapay) நிறுவனம் மூலமாக பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கையடக்கத் தொலைபேசிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.தற்போது பதிவாகும் போக்குவரத்து அபராதங்களில் ஏறத்தாழ 12 சதவீதமானவை இந்த GovPay டிஜிட்டல் முறையிலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இப்படியொரு சூழலில், வாகன ஓட்டிகள் GovPay மூலம் அபராதப் பணத்தைச் செலுத்த முன்வந்தாலும், சில போக்குவரத்து பொலிஸார் அதற்கு மறுப்புத் தெரிவித்து, அவர்களை வழக்கம் போல பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாகப் பல புகார்கள் எழுந்துள்ளன.

பொதுமக்களிடம் இருந்து வந்த இந்த முறைப்பாடுகள் குறித்து நாங்கள் களத்தில் இறங்கி விசாரித்தோம். அப்போது, சில அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட டிஜிட்டல் கருவிகளைத் தங்களின் கடமை நேரங்களின் போது கையோடு எடுத்துச் செல்லத் தவறியதும், வேறு சில அதிகாரிகள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் திறமையின்மையையும் அலட்சியமான மனப்போக்கையும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இனிவரும் நாள்களில் எந்தவொரு அதிகாரியாவது தமக்கு இந்தத் திட்டம் பற்றித் தெரியாது என்றோ அல்லது இதற்கான வசதிகள் இல்லை என்றோ கூறினால், அது கடமை தவறிய செயலாகவும், ஒழுக்கீனமான நடத்தையாகவுமே கருதப்படும்.
எனவே, GovPay மூலம் அபராதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொலிஸ் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்கள் குறித்த புகார்களைப் பொதுமக்கள் 070 4756600 என்ற அவசர உதவி இலக்கத்திற்கு (Hotline) அழைத்துத் தெரிவிக்கலாம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் குறிப்பிட்டுள்ளார்
The Deputy Inspector General of Police for Traffic and Road Safety, W.P.J. Senadheera, has warned that disciplinary action will be taken against traffic police officers who refuse to facilitate spot fine payments through the GovPay system. Introduced in April 2025 to save time and reduce financial burdens for motorists, the system has been rolled out across all nine provinces with nearly 4,000 mobile devices provided via Lankapay. Following public complaints that some officers are still forcing drivers to visit police stations due to negligence or lack of cooperation, authorities have reminded all divisions to strictly enforce this digital payment method and provided a dedicated hotline (070 4756600) for citizens to report non-compliant officers.