மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த அடிப்படையில், தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் ‘Are You Dead’ எனும் புதிய செயலி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலியைப் பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்ய இதில் உள்ள ஒரு பிரத்யேக பொத்தானை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், அவர் முன்னரே தேர்வு செய்து வைத்துள்ள உறவினர்கள் அல்லது நண்பர்களுக்குச் செயலி தானாகவே அவசரத் தகவலை அனுப்பிவிடும்.
வீட்டை விட்டு வெகுதூரத்தில் தனியாக வசிக்கும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனிமை மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது ஒரு சிறந்த தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண சேவையாக வழங்கப்பட்ட போதிலும், லட்சக்கணக்கான மக்கள் இந்தச் செயலியை ஆர்வத்துடன் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், இந்தச் செயலியின் பெயர் சற்று எதிர்மறையாக இருப்பதாகவும், அதற்குப் பதிலாக ‘Are You Okay’ அல்லது ‘How Are You’ போன்ற நேர்மறையான பெயர்களை வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
___________________________________________________________________________________________
A unique safety app called ‘Are You Dead’ has been launched in China, designed to check on individuals living alone. Users must press a button every two days to confirm they are safe; otherwise, the app automatically alerts their pre-registered emergency contacts. While millions are using this paid service for security and peace of mind, critics suggest renaming it to something more positive like ‘Are You Okay.’