திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் அவர்கள் மீண்டும் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தபோது, தான் காதலனுடன்தான் வாழ விரும்புவதாக அந்தப் பெண் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அன்றைய இரவு இருவரும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போது அங்கு ஆவேசமாகப் புகுந்த அந்த ஆணின் மனைவி, சகோதரர் மற்றும் ஒரு கும்பல், அந்தப் பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது ஆடைகளைக் களைந்து, உடல் முழுவதும் சாணத்தைப் பூசி, அரை நிர்வாண நிலையில் ஊர் வீதிகள் வழியாக இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்தக் கொடுமையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்களும் பெண்ணின் உறவினர்களும் சேர்ந்து, அக்கும்பலிடமிருந்து அந்தப் பெண்ணை மீட்டனர். அவருக்குப் புதிய ஆடைகளை வழங்கியதோடு, காவல்துறையினருக்கும் உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தப் பெண்ணைத் தாக்கி அவமானப்படுத்திய மனைவி உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
_______________________________________________________________________________________
A horrific incident in Chhattisgarh’s Pendra district has sparked nationwide outrage after a 35-year-old widow was stripped, smeared with cow dung, and paraded semi-naked through the village for being in a relationship with a married man. Following a confrontation after the couple returned to the village, the man’s wife and relatives assaulted the woman, but she was eventually rescued by villagers and relatives. Police have since hospitalized the victim and arrested three individuals, including the man’s wife, as tensions remain high in the area.