சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர் உள்ளிட்ட அவர்களுக்கு பொறுப்பானவர்களுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் வழிகள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் போக்கு வேகமாக அதிகரித்து வருகின்றது.
குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துதல் அல்லது அவர்களின் அன்றாட செயற்பாடுகளைப் பகிர்தல் என்ற போர்வையில், தனிநபர்களும் நிறுவனங்களும் இவ்வாறான காணொளிகளை வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான காணொளிகள் மற்றும் வலைப்பதிவுகள் (vlogs) மூலம் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்குத் தெரியவருவதால், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தில் பதிவேற்றப்படும் குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான போலிப் படங்களும் காணொளிகளும் உருவாக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.