தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோகன்னஸ்பேர்க்கிற்கு கிழக்கே எகுர்ஹுலேனி நகராட்சிப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு நிறுவன வாகனம் இதனை நேற்றைய தினம் நண்பகல் வேளையில் கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து அப்பகுதியில் இதுவரை மீட்கப்பட்ட பெண்களின் சடலங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம், வயது அல்லது இறப்பிற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கு முதல் நாள் சனிக்கிழமையன்று, அதே நகராட்சியில் மயானத்திற்கு அருகில் அரைகுறை ஆடையுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. அவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இந்தக் கொலை தொடர்பில் நபரொருவர் சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, தொடர்ச்சியாக இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
உலகிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் படுகொலைகள் அதிகளவில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாகத் தென்னாப்பிரிக்கா விளங்குவதுடன், அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 15 பெண்கள் வரை கொல்லப்படுகின்றனர். இந்தச் சம்பவங்கள் தனித்தனியானவையா அல்லது தொடர் கொலையாளியின் செயலா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, நாட்டில் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுவது வருத்தமளிப்பதாகவும், ஆண்கள் தலைகுனிய வேண்டிய விடயம் எனவும் ஜனாதிபதி சிறில் ரமபோசா கவலை வெளியிட்டுள்ளார்.