இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவை மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் தேசிய போக்குவரத்துச் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கான “குறைபாட்டுப் புள்ளி முறைமை” (Demerit Points System) எதிர்வரும் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் பரிசோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள ‘மகநெகும மஹமெதுர’ அமைச்சரவை மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கமைய, அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான ஆறு மாத காலப்பகுதி, சாரதிகள் இந்தப் புதிய முறைமை குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கும் தம்மைப் பொருத்திக் கொள்வதற்குமான சோதனைப் பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027 மார்ச் மாதம் முதல் போக்குவரத்து விதிகளை மீறும் 33 குற்றங்களுக்காக இந்தக் குறைபாட்டுப் புள்ளி முறைமை நாடளாவிய ரீதியில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வருடாந்தம் வீதி விபத்துக்களால் 2,750 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதைத் தடுப்பது அவசியமானது என்றார். இதன் மூலம் உயிர் மற்றும் சொத்து அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாரிய இழப்பைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரம் என்பது ஒரு சொத்து அல்லது உரிமை மட்டுமல்லாமல், அதுவொரு பாரிய பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், இந்த ஆறு மாத பரிசோதனை முயற்சி மக்கள் இதனுடன் பழகிக் கொள்வதற்காக வழங்கப்படுவதாகவும், இதன் உண்மையான தாக்கம் சட்டத்தை மதிக்காமல் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மீது மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பின்டெக் செயலிகள் ஊடாக Gov-Pay மூலமாக இணையவழியில் தண்டப்பணத்தைச் செலுத்தும் வசதிகளும் தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.