சமீபத்தில் நடிகர் சியான் விக்ரம் ‘லார் கிப்பான்’ என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்குடன் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இணையத்தில் இந்த வீடியோ படுவேகமாக வைராலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்பாளர்களும் விலங்கு நல ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.
தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை தாயகமாகக் கொண்ட இந்த லார் கிப்பான், உலகளவில் அழியும் அபாயத்தில் இருக்கும் மிக முக்கியமான ஒரு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். இவ்வளவு பாதுகாக்கப்பட்ட ஒரு வெளிநாட்டு விலங்கைத் தனிநபரின் இடத்தில் வளர்ப்பதற்குச் சட்டப்படி அனுமதி உண்டா, அதற்குத் தேவையான சரியான ஆவணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்விகள் வெடித்தன.

அத்துடன், பிரபலங்கள் இப்படிப்பட்ட வீடியோக்களைத் தொடர்ந்து வெளியிடுவது சட்டவிரோதமான வனவிலங்கு கடத்தலுக்கு வழிவகுத்துவிடும் என்றும் ஆர்வலர்கள் எச்சரித்தனர். சர்ச்சை பெரு வெடிப்பாக மாறவே, விக்ரம் உடனடியாக அந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தூக்கிவிட்டார்.இந்தக் குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்திலிருக்கும் விக்ரமின் சம்பந்தி பண்ணை வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த விலங்கு எப்படிக் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது, அதை வைத்துப் பராமரிக்க முறையான சட்டப்பூர்வ சான்றிதழ்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.