இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுத்தக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த நடைமுறை, மோதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டாயமாக்கப்பட்டு வருவது, அந்தப் பகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் பாகுபாடு எனப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.தங்கள் பகுதி கிராம அலுவலர்களிடம் இருந்து எந்தவொரு அவசரச் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயினும், இந்தக் குடும்ப அட்டை கட்டாயமாகக் கேட்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள், சமுர்த்தி, புதிய வீட்டுத் திட்டங்கள் மற்றும் கிராம அலுவலரின் சான்றிதழ்களைப் பெறுவதற்கு இந்தக் குடும்ப அட்டை மிகவும் அவசியமாகிறது. தேசிய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களைப் போலவே இதையும் நாம் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், பிறப்பு மற்றும் இறப்பு தகவல்களைப் புதுப்பிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் 50 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்மராஜா சசிகாந்த் மற்றும் சுமதி தங்கராசா ஆகியோர் விவரித்துள்ளனர்.இதற்குமுன்னர் மன்னார் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே கட்டாயமாக இருந்த இந்த நடைமுறை, இந்த ஆண்டு முதல் மன்னார் மாவட்டம் முழுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஜசோதரன் கலாதரன் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குடும்ப அட்டை நடைமுறை யாருடைய கட்டளையின் பேரில், எந்தச் சட்டப் பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது என்பதைத் கண்டறியும் நோக்கில், 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஐபென் நிறுவனம் களமிறங்கியது. இந்த விசாரணையில் சில அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
“குடும்ப அட்டை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” எனப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த விவகாரத்தில் இருந்து முற்றிலும் ஒதுங்கிக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, அரசாங்கத்தின் எந்தவொரு சேவைக்கும் இவ்வாறான ஆவணம் கட்டாயமில்லை என்றும் அந்த அமைச்சு திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இருந்த போதிலும், கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகங்கள் இது கட்டாயமான ஒன்று அல்ல என்றும், வெறும் நிர்வாக வசதிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு ஆவணம் மட்டுமே என்றும் கூறுகின்றன. ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகக் கட்டாயமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.
இது பொது நிர்வாக அமைச்சின் நேரடித் திட்டம் கிடையாது, மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுதான் என முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரம், “வடக்கு மாகாணம் முழுவதும் இது பயன்பாட்டில் உள்ளது, அப்படி இல்லை என்று கூறுவது தவறு” என்றும் அவர் தன் தரப்பு நியாயத்தை வாதாடியுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் இந்த அட்டைகளைப் புதுப்பிப்பதற்கோ அல்லது புதிதாக அச்சிடுவதற்கோ ஒரு குடும்பத்திடம் இருந்து 50 ரூபாய் வீதம் வாங்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குடும்பக் கணக்கின்படி பார்த்தால் மட்டும், இதன் மூலமாக வருடத்திற்குச் சுமார் 2,372,750 ரூபாய் பணம் வசூலாகிறது.
அமைச்சின் முறையான அனுமதியோ அல்லது சட்டப்பூர்வமான பின்னணியோ இல்லாமல் மாவட்ட மட்டங்களில் தன்னிச்சையாக வசூலிக்கப்படும் இந்தப் பெருந்தொகை பணம் உண்மையில் யாருடைய கைக்குச் செல்கிறது என்ற பலத்த கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த விரிவான விசாரணையின் மூலமாக, குடும்ப அட்டை என்பது முறையான சட்ட அங்கீகாரமின்றி, மாவட்டத்திற்கு மாவட்டம் தங்களுக்குத் தகுந்தாற்போல் தன்னிச்சையாகச் செயல்படுத்தப்படும் ஒரு நடைமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.
மத்திய அரசின் பொது நிர்வாக அமைச்சுக்கே தெரியாமல் மாகாண மட்டங்களில் இவ்வாறான கட்டாய சட்டங்கள் எவ்வாறு சாத்தியமாகின்றன? அனைவருக்கும் சமத்துவமான அரச சேவை கிடைக்க வேண்டும் என்ற உரிமையை இது பாதிக்காதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் வெளிப்படையான விளக்கங்களை அளிக்க வேண்டும் எனச் சிவில் சமூகத்தினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
An investigation by the iPEN organization has revealed that the “Family Card” system, implemented during the wartime in Sri Lanka’s North and East, continues to be arbitrarily enforced without any clear legal basis or central government approval. While the Ministry of Public Administration denies knowledge of such a requirement, local district secretariats still mandate it for accessing essential public services and charge an annual renewal fee. Civil society groups are now questioning the legality of these actions and the destination of the collected funds, demanding transparency from higher authorities.