கனடா அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின் ஆபத்துகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளன.
அந்த நாடுகளின் வழியைப் பின்பற்றி, தற்போது கனடா அரசாங்கமும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இது குறித்துப் பேசிய கனடாவின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர், நாம் நம்முடைய பிள்ளைகளை இணைய உலகில் அப்படியே கைவிட்டு விடுகிறோம், இது இனிமேலும் தொடரக்கூடாது என்றும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை பாதுகாப்பை இனிமேலாவது நாம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் ஆன்லைன் பதிவுகள், வன்முறையைத் தூண்டுவது, வெறுப்புணர்வை வளர்ப்பது மற்றும் தனிப்பட்ட அந்தரங்கப் படங்கள் உள்ளிட்ட 7 ஆபத்தான விஷயங்களைக் கட்டுப்படுத்துவதை மையமாக வைத்தே இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுடைய தளங்கள் குழந்தைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்காத வரை, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்தச் சமூக ஊடகத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அமைச்சர் மில்லர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள இந்தத் திட்டத்தைக் கண்காணிப்பதற்காகவே ‘டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம்’ என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு ஒன்று புதிதாக உருவாக்கப்பட உள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு என்னென்ன விதிவிலக்குகள் அளிக்கப்படலாம், அதற்கான நிபந்தனைகள் மற்றும் அளவுகோல்கள் என்னென்ன என்பது போன்ற வழிகாட்டுதல்களை இந்த ஒழுங்குமுறை ஆணையம் பின்னர் விரிவாக வெளியிடும்.
அதே நேரத்தில், இந்த புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை முழுமையாகக் கட்டமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதற்குச் சுமார் 18 மாதங்கள் வரை காலம் பிடிக்கலாம் என்றும் அமைச்சர் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
The Canadian government has introduced a new law banning children under the age of 16 from using social media platforms, following similar measures taken by Australia, Brazil, and Indonesia to protect minors from digital harms. Canadian Heritage Minister Marc Miller emphasized that this legislation targets seven harmful areas of online content, including self-harm and cyberbullying, and will remain in effect until social media companies prove their platforms are completely safe for young users. Additionally, Canada will establish a new Digital Safety Commission to oversee these regulations and define exemptions, though setting up this regulatory body could take up to 18 months.