அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்யும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 15ஆம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்த புதிய உத்தரவானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மே மாதம் 31ஆம் திகதியான இன்று முதல் எந்தவொரு அரசு நிறுவனத்திலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்படுகிறது.
அதேபோல், தத்தமது அலுவலகங்களுக்குள் இதுபோன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை முழுமையாகக் கட்டுப்படுத்த நிறுவனங்களின் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய உத்தரவுக்கு முரணில்லாத வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் விதிமுறைகளும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு அரசு நிறுவனமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு “3R” என்ற கோட்பாட்டைப் பின்பற்றியாக வேண்டும்.குறைத்தல் (Reduce) , மறுபயன்பாடு (Reuse) ,மீள்சுழற்சி (Recycle)
மத்திய சுற்றாடல் அமைச்சின் முழுமையான இணக்கப்பாட்டுடன் இந்த விசேட சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
The Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils, and Local Government has officially banned the purchase and use of single-use plastic water bottles in all government institutions starting today, May 31st. This initiative, introduced via a special circular aimed at streamlining waste management within the public sector, mandates institutional heads to enforce the ban and strictly adhere to the “3R” (Reduce, Reuse, Recycle) eco-friendly principles in collaboration with the Central Environmental Authority.