இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வருவது குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் மிகவும் விழிப்புடனும் தீவிர அவதானத்துடனும் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருக்கும் என்று கூறப்பட்டாலும், இது மனிதர்களிடையே மிகக் குறைந்த அளவிலேயே பரவுகிறது என்று அவர் விளக்கமளித்தார்.
ஆசியாவின் மற்ற நாடுகளைப் போலவே இலங்கையும் இந்த வைரஸ் குறித்துக் கண்காணித்து வருவதால் மக்கள் தேவையற்ற பயம் கொள்ள வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கைக்கு தற்போது இதனால் எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது. வரலாற்றில் இது என்றுமே ஒரு பெருந்தொற்றாகப் பரவியது இல்லை, எனவே நாம் வீணாகக் கவலைப்பட வேண்டியதில்லை” என அவர் ஆறுதல் கூறினார்.
இதுவரை இலங்கையில் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. பொதுவாக நோய்வாய்ப்பட்ட ஒருவர் விமானத்தில் ஏறிப் பயணம் செய்யும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்க மாட்டார் என்பதால், நோயுள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காகப் பணத்தையோ நேரத்தையோ செலவழித்துத் தேவையற்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
_____________________________________________________________________________________________
Health Deputy Minister Dr. Hansaka Wijemuni has assured the public that there is no need for unnecessary fear regarding the Nipah virus spreading in India. He emphasized that Sri Lanka’s health authorities are closely monitoring the situation, noting that while the virus has a high mortality rate, it historically does not spread as a pandemic and currently poses no threat to the country as no cases have been reported locally.