சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காலை வீதியோரம் கிடந்த ஒரு சாக்கு மூடையிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட மக்கள், அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த மூடையைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே தலை மற்றும் முகத்தில் பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் ஓர் இளைஞர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த இருவர் அந்த மூடையை வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. உயிரிழந்தவரின் பேண்ட் பையிலிருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கௌரவ் குமார் என்பது உறுதியானது.
இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக கௌரவ் குமாரின் நண்பர் உட்பட பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரைப் பிடித்து போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையின் போது, கௌரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையையும் தாங்களே கொலை செய்துவிட்டதாகக் கைதானவர்கள் கூறிய வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர்களின் உடல்களைத் தேடும் பணியில் அடையார் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றங்கரைப் பகுதிகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூரக் கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்துக் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
____________________________________________________________________________________________
The body of a 24-year-old youth from Bihar, Gaurav Kumar, was found stuffed in a sack in Adyar, Chennai, leading to the arrest of five suspects from Bihar. During interrogation, the suspects shocked the police by confessing to murdering Gaurav’s wife and child as well. Authorities are currently searching for the remains of the woman and child in the Adyar canal and Cooum river areas while investigating the motive behind these brutal killings.