வடக்கு மாகாணத்தில் உரிய அனுமதியின்றி மற்றும் தகுதியற்ற முறையில் இயக்கப்படும் மாணவர் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எச்சரித்துள்ளது. அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 15 வருடங்களுக்குட்பட்ட பழமையானவையாக இருக்க வேண்டும் என்பதுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாணவர்களுக்கான கட்டணச் சலுகைகளை வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதமும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும் 50 சதவீத சலுகை பொருந்தும் எனவும், ஆசிரியர்களிடம் முழுக் கட்டணம் அறவிடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குபடுத்துதல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரை மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதிக்குள் அனுமதிகளைப் புதுப்பிக்கத் தவறும் பேருந்துகள் மீது அக்டோபர் 24க்குப் பின்னர் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை கைப்பற்றப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.