கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவத்திற்கு, உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஹுவல பகுதியில் 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் மூவரை பொலிஸார் தற்போது வலைவீசிப் பிடித்துள்ளனர். கொஹுவல பொலிஸாரும் மொரட்டுவை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (15) தெமட்டகொடை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைதானவர்கள் கொழும்பு 09 மற்றும் 12 ஆகிய இடங்களைச் சேர்ந்த 27, 32 மற்றும் 35 வயதுடைய நபர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கடந்த 6ஆம் திகதி படோவிட்ட பகுதியில் ஒரு சந்தேக நபர் பிடிபட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைக் கொடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஜனவரி 3ஆம் திகதி களுபோவில பகுதியில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டியவர், துப்பாக்கியை வைத்திருந்தவர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என அந்தப் பட்டியலில் பல முக்கிய நபர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Three additional suspects have been arrested for aiding and abetting the shooting of a 16-year-old girl in Kohuwala last month. The suspects, aged 27, 32, and 35, were apprehended in Dematagoda and Wellampitiya by the Police Special Task Force (STF). This follows previous arrests of the motorcyclist, the gunman, and individuals who provided the vehicle and lodging, bringing the authorities closer to resolving the case.