ஐரோப்பா முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்ப அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பொது இடங்களில் மக்கள் மது அருந்துவதற்குப் பிரெஞ்சு அதிகாரிகள் அதிரடியாகத் தடை விதித்துள்ளனர். அத்துடன் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளி சேர்க்கையில் தங்களின் முழு கொள்ளளவை எட்டும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். வியாழக்கிழமையன்று ஐரோப்பாக் கண்டம் முழுவதும் உயிரைப் பறிக்கும் வகையிலான உக்கிரமான வெப்ப அலை நிலவிய சூழலில், பாரிஸ் நகர சுகாதாரத் துறை அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கைகள் இந்த மோசமான நிலைமையை உறுதிப்படுத்துகின்றன.
குறைந்தது 101 மில்லியன் ஐரோப்பிய மக்கள் 35 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான கொளுத்தும் வெப்பநிலையை எதிர்கொண்டு தவித்து வருகின்றனர். இந்த வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக ஏற்கனவே ஏராளமானோர் மரணமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
தாங்க முடியாத இந்த உஷ்ணம் காரணமாக முதியவர்களும், ஏற்கனவே உடல்நலம் குன்றிய நோயாளிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, அவசர உதவிக்கான அழைப்புகளும், மருத்துவமனைகளை நோக்கி விரைந்து வரும் மக்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகப் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தீவிரமடைந்து வரும் வெப்பநிலையால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, பாரிஸ் நகரில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தங்களின் அதிகபட்ச கொள்ளளவை நெருங்கிக்கொண்டிருப்பதாகப் பாரிஸ் காவல் துறைத் தலைவர் பேட்ரிஸ் ஃபார் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடும் வெப்பத்தின் தாக்கத்தால் பாரிஸில் கடந்த புதன்கிழமை அன்று ஒரே நாளில் 24 மணி நேரத்திற்குள் 25 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தேசிய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெப்பம் தொடர்பான உடல்நல பாதிப்புகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஸ்டெஃபனி ரிஸ்ட்டின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, கடந்த புதன்கிழமை நிலவிய சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக, தங்களது வரலாற்றிலேயே ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிருக்கு ஆபத்தான அவசர அழைப்புகள் வந்ததாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜேர்மானிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் ஐரோப்பிய கூட்டு ஆராய்ச்சி மையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு AFP செய்தி நிறுவனம் நடத்திய கணக்கீடுகளின்படி, 380 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 30 டிகிரி செல்சியஸ்க்கும் மேற்பட்ட கடுமையான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரியவந்துள்ளது.
வரலாற்றிலேயே முதல் முறை
இதேவேளை, ஜூன் மாத வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ள ஸ்பெயினில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான குறுகிய காலப்பகுதியில் நிகழ்ந்த 212 மரணங்கள் இந்த கடுமையான வெப்ப அலையோடு தொடர்புடையதாக இருக்கலாம் என அந்நாட்டின் இறப்பு விகிதங்களைக் கண்காணிக்கும் மோமோ அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அதீத வெப்பம் காரணமாக இரண்டு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஒரு கட்டிடத் தொழிலாளி உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளதாக இத்தாலிய செய்தித்தாளான கொரியேரா டெல்லா செரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியில் தற்போதைய வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ள நிலையில், வரும் வார இறுதிக்குள் இது 40 டிகிரி செல்சியஸை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு திட்டமிடப்பட்டிருந்த பல வெளிப்புறப் பொது நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Europe is grappling with an unprecedented and deadly heatwave, pushing health services to the brink of collapse. With temperatures soaring well above 35 degrees Celsius, millions of people are affected, leading to a surge in emergency calls, hospitalizations, and weather-related fatalities across countries like France, Spain, the UK, Italy, and Germany. In response to the crisis, Paris authorities have banned public alcohol consumption as hospitals near full capacity, while multiple outdoor events in Germany have been canceled as temperatures are forecasted to hit 40 degrees Celsius.