யாழில் வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு உட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில்தான் இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இத்திருட்டு விவகாரம் தொடர்பாக கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனும், 19 வயது இளைஞன் ஒருவனும் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி மதிய வேளையில், வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரமாகப் பார்த்து இந்தத் திருட்டு நடந்துள்ளது. வீட்டின் புகைக்கூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த இவர்கள், அங்கிருந்த பெருந்தொகைப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.ரி.வி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியவந்தது. அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சந்தேகநபர்களில் ஒருவன் வல்லைச் சந்திப் பகுதியிலும், மற்றொருவன் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது. வீட்டிற்குள் புகுந்து பணத்தைக் கண்டதும், இவர்கள் நெடுங்கேணியில் உள்ள ஒருவருக்கு ‘வீடியோ கோல்’ (Video call) மூலம் அதனைப் காட்டியுள்ளனர். அவரோ, “அங்கிருக்கும் எல்லாப் பணத்தையும் எடுத்துக்கொண்டு வா” என்று ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்துள்ளார். அதன்படி பணத்தை நெடுங்கேணிக்குக் கொண்டு சென்று, அங்குள்ள ஒரு காணியில் குழிதோண்டிப் புதைத்து வைத்ததை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிரமாகத் தேடியதில், திருடப்பட்ட தொகையிலிருந்து 74 லட்சம் ரூபா பணத்தை பத்திரமாக மீட்டெடுத்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றுமொரு நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை வலைவீசித் தேடும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பிடிபட்ட இரு சந்தேகநபர்களையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் எடுத்து, மேல் விபரங்களை அறிவதற்காக வல்வெட்டித்துறை காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Two prime suspects, a 16-year-old and a 19-year-old from Gerudavil, have been arrested by Valvettithurai police for stealing 11.5 million LKR from a house in Kommanthurai, Jaffna, by breaking in through the chimney. Using CCTV footage, police tracked down and arrested the duo in Vallai and Ariyakulam. Investigations revealed that the suspects had made a video call to an accomplice in Nedunkeni upon finding the cash, who instructed them to bury it in a plot of land there. While police have recovered 74 lakhs of the stolen money and obtained court permission to detain and interrogate the two youth, a hunt is underway for the third accomplice who remains at large.