ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத நாட்டைச் சேர்ந்தவர்கள் குறுகிய கால பயணமாக ஷெங்கன் பகுதிக்குள் வரும்போது, அவர்களைக் கண்காணிக்க ‘Entry Exit’ என்ற புதிய டிஜிட்டல் எல்லைப் பரிசோதனை முறையை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ளது.
இதன் கீழ், ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் எல்லையில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosks) மூலம் தங்களின் புகைப்படம், கைரேகை, பெயர் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், ஒவ்வொரு பயணியும் இந்த டிஜிட்டல் இயந்திரங்களில் தங்களின் பயோமெட்ரிக் விபரங்களை ஒவ்வொன்றாகப் பதிவு செய்வதற்கு கணிசமான நேரம் தேவைப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த வார இறுதியில் பிரித்தானியாவில் இருந்து ஏராளமான மக்கள் பிரான்ஸ் செல்வதற்காக டோவர் (Dover) துறைமுகத்தில் குவிந்தனர்.
அங்கு இந்த புதிய முறையின் கீழ் பயணிகள் தங்களின் விபரங்களைப் பதிவு செய்ய அதிக நேரம் எடுத்ததால், எல்லையில் வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நின்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நிலைமை எவ்வளவு மோசமாக இருந்ததென்றால், பயணிகள் டோவர் துறைமுகத்தை நெருங்குவதற்கே இரண்டு மணி நேரமும், அதன்பின் எல்லையில் உள்ள டிஜிட்டல் இயந்திரங்களில் விபரங்களைப் பதிவு செய்ய மேலும் இரண்டரை மணி நேரமும் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, பிரான்ஸ் எல்லை அதிகாரிகள் டிஜிட்டல் இயந்திரங்கள் மூலம் விபரங்களைப் பதிவு செய்யும் இந்த புதிய நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
அதிகாரிகளின் இந்த அதிரடி முடிவுக்குப் பிறகு, மதியம் இரண்டு மணி முதல் வாகனங்கள் வேகமாக நகரத் தொடங்கின.
அதாவது, டிஜிட்டல் இயந்திரப் பரிசோதனைக்குக் காத்திருக்க வைக்காமல், அதிகாரிகளே நேரடியாக பயணிகளின் ஆவணங்களைச் சரிபார்த்து அவர்களை விரைவாக உள்ளே அனுமதித்தனர்.
அதன் பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணியளவில் மீண்டும் இந்த ‘Entry Exit’ டிஜிட்டல் பதிவு முறை வழக்கம்போல செயல்பாட்டிற்கு வந்தது.