தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய பாதாள உலகக் கும்பல் தலைவர்களுக்காக இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. “சுத்தா ஐயாவின்” ஒரு வேலையை முடிக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில், இவர்கள் வாடகைக்கு கார் எடுத்து துப்பாக்கியைக் கடத்திச் சென்று கொலையாளிகளுக்கு வழங்கியுள்ளனர்.
இந்தக் கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிந்திருந்த இவர்கள், சட்டத்தரணி தனது மனைவியுடன் அலுவலகத்திலிருந்து வரும் நேரத்தைக் கண்காணித்துத் துப்பாக்கிதாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்தக் குற்றத்திற்குப் பிரதிபலனாக இவர்களுக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை; மாறாக ஐஸ் போதைப்பொருள் மட்டுமே கைமாறியுள்ளது. கொலையாளிகளுக்குத் தேவையான தங்குமிட வசதிகளையும் இவர்களே செய்துகொடுத்துள்ளனர்.
படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகைக் காரை மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே, பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் மற்றும் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்துப் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணைகளைத் தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
________________________________________________________________________________________
Two brothers from Navagamuwa were arrested for facilitating the double murder of a lawyer and his wife in Thalangama by providing weapons and logistics for the gunmen. Investigations revealed that the duo operated an Ice drug smuggling ring for overseas criminals and carried out the hit in exchange for drugs rather than money.