மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள அதர்வா கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான இளைஞன் ஒருவன். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவனான இவரது மனைவி சமீபத்தில்தான் கர்ப்பமாகியிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, திடீரென அந்தப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன், கடவுள் தன் மீது கோபமாக இருப்பதாக நம்பியுள்ளார். எப்படியாவது தெய்வத்தைச் சாந்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
பூஜைக்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்த அந்த நபர், ஒரு நரபலி கொடுத்தால் மட்டுமே கடவுள் சமாதானமடைவார் என்ற விபரீத முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக யாரைப் பலி கொடுக்கலாம் என யோசித்தபோது, பக்கத்து வீட்டில் வசித்துவந்த தனது உறவினர்களான 50 மற்றும் 65 வயதுடைய இரு பெண்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அந்தப் பெண்களைப் பூஜைக்கு வருமாறு அழைத்து, அதன் முடிவில் கொடூரமான முறையில் இருவரின் தலையையும் வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற மற்ற இருவரையும் அந்த இளைஞன் கடுமையாகத் தாக்கியுள்ளார். காயமடைந்தவர்கள் பயத்தில் வீட்டை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கொல்லப்பட்ட பெண்களின் தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்ததோடு, சடலங்களுக்கு அருகில் தேங்காய் மற்றும் பூஜைப் பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. பில்லி சூனியம் மற்றும் மூடநம்பிக்கை காரணமாகவே இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளதாகப் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
___________________________________________________________________________________
A 21-year-old man in Madhya Pradesh was arrested for the horrific ritual sacrifice of two elderly neighbors following his wife’s miscarriage. Driven by extreme superstition and mental distress, he believed a human sacrifice was necessary to appease an angry deity, leading him to behead the two women during a staged prayer ceremony before being apprehended by the police.