சீஷெல்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற முதலாவது சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.
சீஷெல்ஸின் விக்டோரியா ரோச் காய்மன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பகுதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. எனினும், இடைவேளைக்கு முந்திய உபாதையீட்டு நேரத்தில் சீஷெல்ஸ் வீரர் பெனல்டி எல்லைக்குள் விதிகளை மீறியதால் இலங்கைக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி ஆதவன் ராஜமோகன் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து, ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்றீ கிக் வாய்ப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்திய ஆதவன் ராஜமோகன், தனது இரண்டாவது கோலைப் புகுத்தி இலங்கையின் கோல் எண்ணிக்கையை உயர்த்தினார்.
தெற்காசிய கால்பந்தாட்டத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சம்பியனாகும் இலக்குடன் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் முன்னெடுத்து வரும் ‘Win SAFF again’ திட்டத்திற்கு இந்த வெற்றி வலு சேர்த்துள்ளது.
இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான இரண்டாவது சிநேகபூர்வ போட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) நடைபெறவுள்ளது. அதன்பிறகு மொரிஷியஸ் செல்லும் இலங்கை அணி, அங்கு இரண்டு சர்வதேச சிநேகபூர்வ போட்டிகளில் விளையாடவுள்ளது.