ஈரானிய நாணயத்தின் மதிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
திறந்த வெளிச் சந்தையில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு இப்போது 20 இலட்சம் ரியால்களைத் தாண்டிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பல தசாப்தங்களாக நிலவும் சர்வதேசப் பொருளாதாரத் தடைகளுடன், கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் போரும் சேர்ந்து அங்குள்ள 9.2 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
அத்தியாவசிய உணவுகள், உடைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதால், பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
போருக்கு முன்பாக, ஒரு டொலர் மதிப்பிலான 20 இலட்சம் ரியால்களைக் கொண்டு 4 கிலோ தக்காளி, அரை கிலோ கோழி இறைச்சி மற்றும் ஒரு லீற்றருக்கும் குறைவான சமையல் எண்ணெயைக் கொள்வனவு செய்ய முடிந்தது.
ஆனால், இன்றோ அதே தொகையைக் கொண்டு அதில் பாதியளவு பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்ய முடியும் என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தக்காளியின் விலை 71 சதவீதத்தாலும், கோழி இறைச்சியின் விலை 74 சதவீதத்தாலும், சமையல் எண்ணெயின் விலை 177 சதவீதத்தாலும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன.
மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து 642 சதவீதத்தாலும், பரசிட்டமோல் போன்ற அவசியமான மருந்துகள் 93 சதவீதத்தாலும், குழந்தைகளுக்கான பால்மா 95 சதவீதமும் அதிகரித்துள்ளன.
இத்தகைய இக்கட்டான சூழலில், மாத இறுதி வரை கையில் இருக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை ஓட்டுவதே தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக ஈரானிய மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
ஈரானிய அரசின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 16.6 கோடி முதல் 22 கோடி ரியால்கள் வரை மட்டுமே உள்ள நிலையில், அன்றாட வாழ்வாதாரச் செலவுகளும் மருத்துவச் செலவுகளும் அதைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றன.
தொழிற்துறை உற்பத்தி முடக்கம், துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மற்றும் தீவிரமடைந்து வரும் வேலையின்மை போன்ற காரணங்களால் ஈரானியக் குடும்பங்களின் கொள்வனவுத் திறன் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
The Iranian rial has plummeted to historic lows due to ongoing international sanctions and the recent US-Israel war, causing inflation to skyrocket. With the exchange rate crossing 2 million rials per US dollar, the purchasing power of over 92 million Iranian citizens has collapsed, leading to sharp price increases in basic food items, baby formula, and critical medical supplies.