Skip to main content

Super Tamils

வவுனியாவில் அடுத்தடுத்து நடந்த திருட்டுகள்…!3 பேரை வளைத்த பொலிஸார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், வவுனியாவில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (21.07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சபாரி மோட்டார் சைக்கிள் ஒன்று மர்மமான முறையில் திருடப்பட்டது.

மேலும், இறம்பைக்குளம் கருமாரியம்மன் கோவில், அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோவில், குட்செட் வீதி கருமாரியம்மன் கோவில் மற்றும் நகர் இலுப்பையடி பகுதி உணவகம் என பல இடங்களிலும் தொடர்ச்சியாக திருட்டுகள் அரங்கேறியிருந்தன.

இது குறித்து பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் உரிமையாளர், உணவக உரிமையாளர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறையான புகார்களை அளித்தனர்.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலல அவர்களின் வழிகாட்டலிலும், குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பீ இலங்கசிங்க தலைமையிலும், பொலிஸ் சாராஜன்டுகளான உடுவெல்ல (70451), பியங்கர (47358), பொலிஸ் கொன்ஸ்தாபில்களான ஷேரதி (14692), உபாலி (60945), நவகீதன் (8098) உள்ளிட்ட குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, தேக்கவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும், கள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தம்பியும், மகாரம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அண்ணாவும் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், திருடப்பட்ட சபாரி மோட்டார் சைக்கிள், உணவகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் ஆகியவை பொலிசாரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்துவரும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Three individuals have been arrested by the Vavuniya Police Crime Investigation Division in connection with multiple theft incidents, including a stolen motorcycle, temple robberies, and a restaurant break-in, with stolen goods and tools subsequently recovered by the authorities for court presentation.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்