எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாகத் கையகப்படுத்த கடற்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடக்கவுள்ள நிலையில், அந்த நிலத்தின் உரிமையாளரான தாய் ஒருவர் கண்ணீர் மல்க தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குடும்ப நிலை
கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு எமது பூர்வீக நிலத்தைக் கடற்படையினர் வலுக்கட்டாயமாகப் பிடித்து முகாம் அமைத்துக் கொண்டனர். அந்த நிலத்தில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி நாங்கள் வாழ்ந்து வந்தோம். சுமார் 30 வருடங்களாக எமது நிலத்தைத் திரும்பத் தருமாறு கடற்படையினரிடமும், பல அரசியல்வாதிகளிடமும் கேட்டும் எந்தப் பயனும் இல்லை என அவர் வேதனைப்படுகிறார்.
அந்தத் தாயின் குடும்பச் சூழல் மிகவும் சோகமாக உள்ளது. அவரது கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவர்களைப் பராமரித்து வரும் அந்தத் தாய், தனது குடும்ப நிலையைக் கருதி நிலத்தை விடுவிக்கப் போராடி வருகிறார். “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்று ஜனாதிபதி கூறி வரும் நிலையில், தனது காணி மட்டும் ஏன் அபகரிக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி, மகளின் எதிர்கால சீதனமாக வழங்கப்பட வேண்டிய இந்த நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்பதே அவரது இறுதி எதிர்பார்ப்பாக உள்ளது.
A mother from Eluvaitivu is desperately pleading with the President to stop the Navy from permanently acquiring her ancestral land, which is scheduled for survey on the 20th. She shares a heartbreaking account of caring for her cancer-stricken husband and mentally ill son, explaining that she intended this land to be her daughter’s dowry. After 30 years of failed appeals to various authorities, she calls on the President to uphold his promise of returning land to the people and restore her property during his visit to Jaffna.