சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்துவந்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய இருவரையும் திடீரென காணவில்லை.
இது தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டு தம்பதியினரே இவர்களைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி, மிகக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவர்களின் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகவே இந்தக் கொலை நடந்துள்ளது. அதோடு, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் புதைத்த குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த கொடூரக் குற்றத்திற்குத் துணையாக இருந்த மற்றொரு சந்தேகநபரையும் பொலிஸார் கடந்த புதன்கிழமை (3) இரவு மீதொட்டமுல்ல ரயில்வே வீதிக்கு அருகில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான இந்த சந்தேகநபரைக் கைது செய்த போது, அவரிடம் 13 கிராம் 10 மில்லிகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேல்விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
The Colombo Crimes Division has arrested another suspect involved in the brutal 2020 double murder of a couple in Grandpass. The victims were murdered over a personal dispute, their jewelry was stolen, and their dismembered bodies were buried in a canal. While three suspects were previously arrested, this accomplice, a 34-year-old resident of Wellampitiya, was apprehended near Meetotamulla while in possession of “Ice” narcotics.