இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறியது….
தர்மசாலா, ரசிகர்களைக் குஷிப்படுத்தி வரும் 19-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் திருவிழா இப்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் களம் கண்ட இந்தத் தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (18 புள்ளிகள்), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளிகள்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்தச் சூழலில், புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றிய நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் நேற்று நேருக்கு நேர் மோதின.
இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை வாரிக் குவித்தது. இந்த ஜோடி ஆட்டமிழந்த பிறகு ஒன்று சேர்ந்த கேப்டன் ரஜத் படிதார் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஜோடியும் சற்றும் சளைக்காமல் விளாசத் தொடங்கியது. இதில் மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட ரஜத் படிதார், வெறும் 21 பந்துகளிலேயே தனது அரை சதத்தைக் கடந்து அசத்தினார்….
தொடர்ந்து குஜராத் அணியின் பந்துவீச்சை நாசம் செய்த ரஜத் படிதார், 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
இதன் மூலம் ஐபிஎல் பிளே-ஆப் சுற்று வரலாற்றிலேயே அதிக ரன்கள் (254) குவித்த அணி என்ற புதிய சரித்திர சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு நடந்த 2-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி 233 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தப் பழைய சாதனையை ஆர்சிபி தகர்த்துப் புதிய வரலாறு எழுதியுள்ளது.
அடுத்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி குஜராத் அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கியது.
ஆனால், ஆரம்பத்திலிருந்தே பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் குஜராத் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். சாய் சுதர்சன் 14 ரன்களிலும், கில் 2 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 29 ரன்களிலும், நிஷாந்த் சிந்து 5 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினர். பெங்களூரு அணியினர் பந்துவீச்சில் அசத்தியதால், குஜராத் அணியால் ரன் வேகத்தை உயர்த்த முடியாமல் திணறியது. அந்த அணியில் திவேட்டியா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி அரைசதம் கடந்தார்….
இறுதியில், 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி 162 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 92 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேநேரம், இந்தத் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த குஜராத் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று வரும் அணியுடன் அடுத்த தகுதிச் சுற்றில் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
In the first Qualifier of the 19th IPL season held in Dharamshala, Royal Challengers Bengaluru (RCB) defeated Gujarat Titans by 92 runs to secure a spot in the finals. Batting first, RCB posted a monumental total of 254/5 in 20 overs, driven by Rajat Patidar’s blistering unbeaten 93 off 33 balls, setting a new record for the highest score in IPL playoff history. In response, Gujarat Titans crumbled under RCB’s clinical bowling attack and were bowled out for 162 runs in 19.3 overs, despite a fighting half-century from Tewatia. While Bengaluru advanced directly to the final, Gujarat will get another chance as they face the winner of the Eliminator match.