யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதில் ஏற்பட்ட பாதிப்பால் அவரது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது. இது மருத்துவத் தவறு எனக்கூறி பெற்றோர் தொடர்ந்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் பொலிஸார் மருத்துவர்களைக் கைது செய்யாமல், தாதியர்களை மட்டும் சந்தேகநபர்களாக முன்னிலைப்படுத்துவது குறித்து நீதவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே மருந்து ஏற்றியதாக தாதியர்கள் கூறியுள்ள போதிலும், பொலிஸார் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியாமல் விசாரணையைத் தாமதப்படுத்துவதாக மன்று சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸாரின் இத்தகைய பாரபட்சமான மற்றும் முறையற்ற விசாரணை நீடித்தால், இந்த வழக்கினை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க நேரிடும் என நீதவான் எச்சரித்துள்ளார். மேலும், இது குறித்த விபரங்களை பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
____________________________________________________________________________________________
The Jaffna Magistrate’s Court has expressed strong dissatisfaction with the police investigation into a medical negligence case where a young girl’s hand was amputated at the Jaffna Teaching Hospital. The Magistrate criticized the police for failing to name doctors as suspects despite nurses claiming they acted on medical orders, warning that the case would be transferred to the CID if improper investigation and delays continue.