ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் மாணவர்களிடையே காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருவதையடுத்து, கற்றல் நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுக்க கல்விச் சபை தீர்மானித்துள்ளது.
தலைச்சுற்றல், வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவ சபையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து ஏனைய மாணவர்களை இன்று பிற்பகல் வீடுகளுக்கு அனுப்புவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சில மாணவர்கள் முச்சக்கர வண்டிகளில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் விடுதிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால், எதிர்வரும் வாரத்தில் வழமைபோன்று கற்றல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.