வவுனியா மாநகர சபையின் முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி, மாகாண ஆளுநர் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, வரும் ஆகஸ்ட் 7-ஆம் திகதி வரை நீட்டித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (ஜூலை 15) உத்தரவிட்டுள்ளது.
மாநகர முதல்வர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனு, இன்று வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளான மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான அரச சட்டவாதி, பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுத்தார். மனுதாரர் தரப்பில் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளை, கடந்த ஜூலை 3-ஆம் திகதி மனுதாரருக்குச் சாதகமாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவை தாங்கள் கடுமையாக எதிர்க்கப்போவதாக அரச சட்டவாதி தனது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டார்.
இதனை ஆராய்ந்த நீதிமன்றம், ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் தமது ஆட்சேபனைப் பதில்களை இந்த மாதம் 28-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், முதல்வரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
The Vavuniya High Court has extended the interim stay order on the gazette notification issued by the Governor to remove the Vavuniya Municipal Council Mayor from his position. The court, which heard the case today (July 15), granted the respondents—the Governor and the Commissioner of Local Government—time until July 28 to file their objections and scheduled the next hearing for August 7.