மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான முல்லேரியா உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் சில முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு சேர்த்து, தெஹிவளை மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் உள்ள நீர் உந்து நிலையங்களின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கின்றன.
இந்தப் பராமரிப்பு வேலைகள் காரணமாக, கொழும்பின் முக்கிய இடங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று (04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணி நேரத்திற்குத் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 01 இலிருந்து 15 வரையான ஒட்டுமொத்தப் பகுதிகள் மற்றும்,
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் இந்தத் தண்ணீர் தடை அமலில் இருக்கும்.
எனவே, இந்த நீர் விநியோகத்தடை ஏற்படும் சமயத்தில் பொதுமக்களுக்கு அன்றாடப் பணிகளில் சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், அதைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நுகர்வோரைத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
The National Water Supply and Drainage Board has announced a 12-hour water cut today (04) from 9:00 AM to 9:00 PM affecting Colombo 01 to 15 and several suburban areas including Sri Jayawardenepura Kotte, Rajagiriya, and Maharagama. The disruption is due to essential maintenance at the Mulleriyawatta grid substation affecting the Ambathale treatment plant, alongside upgrade works at the Dehiwala and Maligawatta water pumping stations. Residents are advised to store sufficient water in advance and use it sparingly to minimize inconvenience.