Skip to main content

Super Tamils

அடையாள அட்டை அலுவலகம் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி…!

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, இந்த மோசடி ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

சமீபகாலமாக, மிகவும் உத்தியோகபூர்வமான மற்றும் நம்பகமான முறையில் இந்த மோசடிச் செய்திகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் மிக எளிதாக ஏமாற்றமடைவதற்கான அதிக ஆபத்து உள்ளதாக அந்த பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த மோசடி உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்று பார்ப்போம்.

மோசடிக்காரர்கள் வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி போலி அறிவிப்புகளை அனுப்புகின்றனர். இதில் ஆட்பதிவு திணைக்களத்தின் பெயர், தொடர்பு விபரங்கள் மற்றும் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவு போன்றவற்றை போலியாகப் பயன்படுத்துகின்றனர்.

பொதுமக்களை முழுமையாக நம்பவைப்பதற்காக, அவர்களின் முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை எண் மற்றும் வீட்டு முகவரி போன்ற சரியான விபரங்களை உள்ளடக்கி இந்தச் செய்திகளை அனுப்புகிறார்கள்.

அடையாள அட்டைச் சட்டத்தின் கீழ், விபரங்களை முறைப்படுத்துவதற்கும் சரிபார்ப்பதற்கும் திணைக்கள அலுவலகத்திற்கு வர வேண்டும் எனக் கூறி, அதற்கான ஒரு போலி திகதி, நேரம் மற்றும் இடத்தையும் அந்த செய்தியில் குறிப்பிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி, நேரில் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்டைவிரல் அடையாளச் சரிபார்ப்பு  போன்ற விபரங்களும் அதில் அச்சு அசலாகச் சேர்க்கப்பட்டிருக்கும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவில்லை என்றால், அடையாள அட்டையுடன் தொடர்புடைய சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மக்களை பயமுறுத்துகின்றனர். பின்னர், இந்த நேரத்தை மாற்றுவதற்கென ஒரு போலி உதவி எண்ணையும்  வழங்குகின்றனர்.

பொதுவாக, இந்தச் செய்திகள் நேர்முகப்பரீட்சைக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குச் சற்று முன்னதாகவே அனுப்பப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பதற்றத்திலும் பயத்திலும் அந்தப் போலி உதவி எண்களை அவசரமாகத் தொடர்பு கொள்கின்றனர்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களின் ஒற்றை முறை கடவுச்சொற்கள் மற்றும் வங்கி விபரங்களை நைசாகப் பெற்று பெரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, ஆட்பதிவு திணைக்களம் எவ்வித அடையாளச் சரிபார்ப்புகளையும் அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் ஒருபோதும் வட்ஸ்அப் மூலம் மேற்கொள்வதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இவ்வாறான போலிச் செய்திகளுக்குப் பதிலளிப்பதையோ, சந்தேகத்துக்கிடமான லிங்க்குகளை  கிளிக் செய்வதையோ அல்லது சரிபார்க்கப்படாத எண்களைத் தொடர்பு கொள்வதையோ முற்றாகத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களது ரகசிய  எண்களையோ அல்லது வங்கி விபரங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The Sri Lanka Computer Emergency Readiness Team (SLCERT) has issued a warning regarding a financial scam operating under the guise of the Department for Registration of Persons. Fraudsters are sending highly authentic-looking WhatsApp messages containing personal details like NIC numbers and addresses to summon citizens for ID verification. When victims call the fake helpline provided out of panic, scammers steal their OTPs and banking details to siphon off funds. Authorities have clarified that the Department never uses WhatsApp for official notifications and urged the public to stay vigilant and protect their financial credentials.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்