இந்தியாவில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், காவல்துறைத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பீகாரில் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்தித் திருமணம் செய்து வைக்கும் ‘பகடவா விவா’ எனும் கலாசாரம் நிதிஷ் குமார் என்ற இளைஞருக்கு நேர்ந்துள்ளது. நூலகத்திற்குச் சென்ற இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து, ஒரு கோவிலில் வைத்து வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இது தொடர்பான காணொளியில், அந்த இளைஞர் நிலைகுலைந்த நிலையில் இருப்பதும், மற்றொருவர் அவரது கையைப் பிடித்து மணமகளுக்கு மாலை போட வைப்பதும் பதிவாகியுள்ளது. திருமணத்திற்குப் பின் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்ட தன்னை, சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியை ஆதாரமாகக் கொண்டு பொலிஸார் மீட்டதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சமஸ்திபூர் பொலிஸார் தற்போது இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, இது கட்டாயத் திருமணமா அல்லது பரஸ்பர சம்மதத்துடன் நடந்ததா என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
In Bihar, India, an aspiring policeman named Nitish Kumar was kidnapped, drugged, and forcibly married under the notorious ‘Pakadwa Vivah’ tradition. After a viral video showed him being forced to perform wedding rituals while semi-conscious, police rescued him from confinement and have launched an investigation into the incident.