பீஜிங்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியில், சீனாவின் ‘போயாகோங்டாவ் மரைன் டெக்னாலஜி குரூப்’ தயாரித்த, உண்மையான மீனைப் போன்றே அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய ‘BG-5 கோல்டன் டிராகன் பிஷ்’ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் நவீன தொழில்நுட்ப உலகில் தற்போது ஒரு சுவாரஸ்யமான ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘அரோவானா’ போன்ற தோற்றம் கொண்டுள்ள இந்த அசத்தல் ரோபோ, நீருக்கு அடியில் உளவு பார்க்கவும் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளுக்கும் ஏற்ற வகையிலான ‘பயோமிமடிக்’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
இந்த பிஜி-5 ரக நீருக்கடி ரோபோவானது மூன்று கிலோகிராம் எடையும், 640 மி.மீ நீளமும், 204 மி.மீ அகலமும் மற்றும் 90 மி.மீ உயரமும் கொண்ட சிறிய அளவிலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
தண்ணீருக்கு அடியில் அதிகபட்சமாக ஐந்து மீட்டர் ஆழம் வரை இந்த ரோபோவால் செயல்பட முடியும். அதுமட்டுமின்றி, விநாடிக்கு 0.6 மீட்டர் என்ற வேகத்தில் மிகத் துல்லியமாக இது பயணிக்கக் கூடியது.
வழக்கமான மோட்டார்கள் அல்லது மின்விசிறிகளுக்குப் பதிலாக, தனது வாலின் அலை போன்ற இயற்கையான அசைவுகள் மூலமாகவே இது முன்னோக்கி நகர்கிறது. இதன் வால் பகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று இணைப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த எடையும் மீனைப் போன்ற இயங்கும் தன்மையும் இருப்பதால், வழக்கமான பெரிய ரக நீர்மூழ்கிகள் நுழைய முடியாத ஆழமற்ற மற்றும் குறுகிய கடற்பகுதிகளில் எதிரிகளின் கண்களில் படாமல் இரகசியமாகக் கண்காணிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும், இதன் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலான பிஜி-5வி (BG-5V), தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப பாதை அமைத்தல், பணிகளைப் பிரித்து வழங்குதல் மற்றும் பல ரோபோக்கள் ஒன்றுசேர்ந்து குழுவாக இணைந்து செயலாற்றும் சிறப்புத் திறனைக் கொண்டுள்ளது.
இந்த நூதனத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய போயாகோங்டாவ் நிறுவனம், ஏற்கனவே சீன ராணுவத்துடன் இணைந்து ‘ரோபோ-ஷார்க்’ எனப்படும் சுறா வடிவ ரோபோவை உருவாக்கியுள்ளதோடு, நாட்டின் பல முக்கியப் பாதுகாப்புத் திட்டங்களிலும் பங்கெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
China’s Boyangangdao Marine Technology Group has showcased the ‘BG-5 Golden Dragon Fish’ biomimetic underwater robot at the 2026 International Fair for Trade in Services in Beijing, designed for covert reconnaissance and surveillance in shallow waters.