காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார். முன்னாள் ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாகச் சாடி அவர் உரையாற்றினார்.
சர்க்காரியா ஆணைக்குழு மற்றும் மிசா அவசரகாலச் சட்டம் குறித்துப் பேசிய முதலமைச்சர், திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மிசா காலம் பற்றி அவர் விளக்கமளித்த போது செய்த சில சைகைகள், திமுக தலைவரை உருவக்கேலி செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தனர். முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரின் ஆசனத்திற்கு முன்பாகத் திரண்டு அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைப் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்டுக்கொண்டதை அடுத்து, சபாநாயகர் முதலில் அனுமதியளித்து, பின்னர் தனது முடிவை உடனடியாக மாற்றிக்கொண்டார். இதனால் பேரவையில் பெரும் குழப்பமும் பரபரப்பும் நிலவியது.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் உரையைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்த ‘சுறா’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இடம்பெறும் பிரபல நகைச்சுவைக் காட்சி ஒன்றை உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முதலமைச்சரின் சட்டமன்ற உரையை மறைமுகமாகக் கேலி செய்யும் வகையிலேயே இந்த காணொளிப் பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, திமுக ஆதரவாளர்கள் அதனைச் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
During the Tamil Nadu legislative assembly session, Chief Minister Joseph Vijay’s critical remarks on the DMK regarding the MISA act sparked a major uproar, leading to denied opposition speaking rights, protests in the assembly, and opposition leader Udhayanidhi Stalin subsequently sharing a satirical movie clip on Instagram mocking the Chief Minister.