இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளால் இடம்பெயர்ந்த 850,000-க்கும் அதிகமான லெபனான் மக்கள் மீண்டும் தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமையகம் (UNHCR) தெரிவித்துள்ளது.
ஐ.நா. அகதிகள் முகமையகத்தின் இந்தத் தகவல்களின்படி, பொதுமக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியிருந்தாலும், களத்தில் உள்ள கடினமான யதார்த்தங்கள் இன்னும் முழுமையாக மாறவில்லை. அங்கு நிலவும் நெருக்கடிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் சம்பந்தப்பட்ட தரப்புகள் எச்சரித்துள்ளன. தற்காலிக முகாம்களில் வசிக்கும் 22,000 பேர் உட்பட சுமார் 3,60,000 பேர் இன்னமும் பாதுகாப்பற்ற மற்றும் இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர்.
பெரும்பாலான ஏனையோர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல வழியின்றி, உறவினர்களின் வீடுகளிலோ அல்லது நகர்ப்புறங்களில் உள்ள நெரிசலான வாடகைக் குடியிருப்புகளிலோ மிகவும் சிரமப்பட்டு வசித்து வருவதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தச் சூழலில், போர்நிறுத்த ஏற்பாடுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரப்பு மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களிடையே புதிய இடப்பெயர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் லெபனானில் பாதுகாப்பு அற்ற சூழல் தொடர்ந்து நிலவுவதுடன், அன்றாடத் தேவைகளுக்காகப் போராடும் மக்களின் மனிதாபிமானத் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
தற்போதைய கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள், தொடரும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் எஞ்சியுள்ள வெடிக்காத வெடிபொருட்களின் மரண அச்சுறுத்தல் என்பன தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பகுதிகளில் வாழும் சாதாரண மக்களுக்குப் பெரும் தலைவலியாகவும் ஆபத்தாகவும் உருவெடுத்துள்ளன. மோதலின் உச்சக்கட்டக் காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
According to the UNHCR, over 850,000 displaced Lebanese have returned home following Israeli airstrikes, though hundreds of thousands remain displaced, and ongoing security risks, unexploded ordnance, and fresh strikes in southern Lebanon continue to fuel humanitarian concerns.