தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் மனித குலத்திற்கு நன்மைகளைத் தந்தாலும், மறுபுறம் அது பெண்களின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறி வருகிறது.
மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஸ்மார்ட் கிளாஸ்’ (Smart Glasses) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொது இடங்களில் பெண்களுக்குத் தெரியாமலேயே அவர்களை ஆபாசமாகப் படம்பிடித்து இணையத்தில் கசியவிடும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்துள்ளன. சாதாரணக் கண்ணாடி போலவே காட்சியளிக்கும் இந்தச் சாதனத்தில் ரகசியமாகப் படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதி உள்ளது. இதனைத் தவறாகப் பயன்படுத்தும் சிலர், பேருந்து நிலையங்கள் மற்றும் கடைவீதிகள் போன்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் பெண்களை தவறான கோணங்களில் படம்பிடித்து வருகின்றனர்.

இப்படித் திருட்டுத்தனமாக எடுக்கப்படும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் ஆபாசத் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் அளிக்கையில், வீடியோ பதிவு செய்யப்படும்போது கண்ணாடியில் இருக்கும் சிறிய எல்.இ.டி (LED) விளக்கு ஒளிரும் என்பதால் மற்றவர்கள் அதைக் கண்டுபிடித்துவிடலாம் எனக் கூறியிருந்தது.
ஆனால், பிபிசி (BBC) செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த வாதம் பொய்யாக்கப்பட்டுள்ளது. மிக எளிதான வழிகளில் அந்த எச்சரிக்கை விளக்கை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும் என்பதையும், எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து ரகசியமாக வீடியோ எடுக்க முடியும் என்பதையும் அவர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
தங்களுக்குத் தெரியாமல் தங்களின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாவதைக் கண்டு பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும் சமூக ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். இதுபோன்ற நவீன கருவிகள் தனிமனித சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பொது இடங்களில் இதுபோன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
_____________________________________________________________________________________________
The rise of Meta’s ‘Smart Glasses’ has sparked serious safety concerns as reports emerge of individuals using them to secretly film women in public places for voyeuristic purposes. Despite Meta’s claim that a built-in LED indicator alerts others when recording is active, a BBC investigation revealed that this light can be easily obscured to allow covert filming. Social activists are calling for stricter global regulations on such wearable technology to protect privacy and prevent psychological distress caused by the unauthorized distribution of such content.