Samsung தனது அடுத்த தலைமுறை Galaxy Ring 2 குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் கேலக்ஸி ரிங் மாடலுக்குப் பிறகு, அதன் அடுத்த பதிப்பு குறித்து சந்தையில் பல்வேறு வதந்திகள் உலா வந்தன. இந்நிலையில், புதிய மாடல் குறித்த அறிவிப்பை நிறுவனமே இப்போது நேரடியாக வெளியிட்டுள்ளது. சாம்சங் டிஜிட்டல் ஹெல்த் (Samsung Digital Health) பிரிவின் தலைவரான டாக்டர் ஹான் பக் (Dr. Hon Pak), கேலக்ஸி ரிங் 2 தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதில் ஐபோன் (iPhone) பயனர்களும் இணைந்துகொள்ளும் வகையில் புதிய வசதி வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை சந்தையில் இருந்த கேலக்ஸி ரிங் மாடலை ஆண்ட்ராய்டு (Android) சாதனங்களுடன் மட்டுமே இணைத்துப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனிவரும் காலத்தில் ஐபோன்களுக்கும் சாம்சங் ஹெல்த் மற்றும் கேலக்ஸி வியரபிள் போன்ற செயலிகள் கிடைக்குமானால், கேலக்ஸி ரிங் 2 சாதனத்தின் மூலம் ஐபோன் பயனர்களும் தங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுமையாகக் கண்காணித்துக் கொள்ள முடியும். அதோடு, புதிய கேலக்ஸி ரிங் 2 மாடலில் மிகவும் துல்லியமான ஆரோக்கிய கண்காணிப்பு வசதி மற்றும் நீண்ட நேரம் உழைக்கக்கூடிய பேட்டரி ஆயுள் போன்ற பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஹெல்த் செயலி மூலமாக ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, இதயத் துடிப்பு, தூக்கத்தின் தரம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த பல்வேறு தரவுகளைப் பயனர்கள் துல்லியமாகப் பெற முடியும்.
மேலும், வரும் 2027-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ள ‘ஏஐ ஹெல்த் கோச்சிங்’ (AI Health Coaching) என்ற புதிய தொழில்நுட்ப வசதியானது, பயனர்களின் அன்றாடப் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் வழங்கும் எனத் தெரிகிறது.
இதுமட்டுமன்றி, சாம்சங் நிறுவனம் தனது ‘ஸ்மார்ட் திங்ஸ்’ (SmartThings) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயனர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமான சமையல் குறிப்புகளைப் பரிந்துரைப்பதற்கும் திட்டமிட்டு வருகிறது.
Samsung has officially confirmed the development of its next-generation Galaxy Ring 2, which is expected to feature high-precision health tracking and longer battery life. A significant potential update is the introduction of iPhone compatibility, expanding its reach beyond Android users, while future plans include a 2027 AI Health Coaching feature and SmartThings integration for personalized dietary suggestions.