கரைச்சி பிரதேச சபையின் கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த மறுஆய்வுக் கூட்டம், அதன் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்த தவிசாளர், சபையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளித்தார்.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வின் போது, முன்னாள் போராளியும் பிரதேச சபை உறுப்பினருமான ஜீவாவினால் ஒரு முக்கிய பிரேரணை முன்வைக்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் வாழும் பல முன்னாள் போராளிகள், கடந்த 16 வருடங்களாக சொந்தமாக நிலமோ, வீடோ இன்றி சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருவதாக அவர் அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை, முன்னாள் போராளிகள் பலர் திடீர் திடீரென விசித்திரமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல மர்ம மரணங்கள் நிகழும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தாங்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தபோது, தங்களின் அனுமதியின்றி எதற்காக என்றே தெரியாமல் பல ஊசிகள் போடப்பட்டதாக அங்குள்ளவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இதனால் தங்களுக்கு ஏதேனும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்குமோ என்ற பயம் முன்னாள் போராளிகளிடையே எழுந்துள்ளது. தற்போது சபை உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் போராளிகள் சிலரும் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக போராளிகள் நலன்புரிச் சங்கமும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில், தங்களுக்குப் போடப்பட்ட ஊசிகளின் பின்னணியை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இணங்க, இப்பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்படி, நோய்வாய்ப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வதற்கும், வீடற்ற போராளிகளுக்கு துறை சார்ந்த திணைக்களங்களின் உதவியுடன் காணி மற்றும் வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், தகுதி வாய்ந்த போராளிகள் தங்களின் விபரங்களை அந்தந்தப் பகுதி பிரதேச சபை உறுப்பினர்களிடம் வழங்கிப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலங்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பாகவும் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சடலங்களை எரிப்பதற்காக 40க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், இப்பகுதிகளிலுள்ள மயானங்களில் சடலங்களை எரியூட்டவோ அல்லது அடக்கம் செய்யவோ வேண்டுமானால், பிரதேச சபையிடம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், மரண வீடுகளில் பட்டாசு கொளுத்தும் வழமைக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மரணம் நிகழ்ந்த வீட்டிலும், இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்திலும் தலா ஒருமுறை மட்டுமே பட்டாசுகளைக் கொளுத்த அனுமதிக்கப்படும்.
அமங்கல வாத்தியங்கள் இசைப்பது தொடர்பிலும் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சடலத்தை வீதி வழியே கொண்டு செல்லும்போது, எங்கும் நிப்பாட்டாமல் வீட்டிலிருந்து மயானம் வரை நேரடியாகக் கொண்டு செல்ல வேண்டும். அத்துடன், அந்தியட்டி போன்ற கிரியைகளைச் செய்வதற்காகக் காலை முதல் மாலை 7 மணி வரை மட்டுமே மயானத்திற்குள் செல்ல அனுமதி உண்டு. அதன் பின்னர் எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. சடலத்தை எடுத்துச் செல்வதற்கான வழித்தட அனுமதியைப் பெறுவதுடன், இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவிசாளர் எச்சரித்துள்ளார்.
The Karachchi Pradeshiya Sabha, led by Chairman Arunachalam Vezhamalikithan, has passed an important resolution to address the grievances of former combatants. Following a motion raised by a member, the council will facilitate medical check-ups with the approval of the Northern Province Governor to investigate the mysterious illnesses and long-term health effects allegedly caused by injections administered during their time in rehabilitation camps. Additionally, steps will be taken to provide land and housing for homeless former fighters. The local council has also enforced strict guidelines and legal regulations regarding burial/cremation permits, restricted times for visiting cemeteries, and limitations on firecrackers during funeral processions.