கால்பந்து தொடரின் ‘ஜி’ பிரிவுக்கான இன்றைய (16) ஆட்டத்தில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் இப்போட்டி அரங்கேறியது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நியூசிலாந்து அணி அதிரடி காட்டியது. அந்த அணியின் கிறிஸ் வூட் கொடுத்த ஒரு அருமையான பாஸை சரியாகப் பயன்படுத்திய எலிஜா ஜஸ்ட், பந்தை லாவகமாக கோல் வலைக்குள் தள்ளி தனது அணிக்கு 1-0 என ஆரம்பத்திலேயே முன்னிலையைத் தேடித்தந்தார்.
இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுக்க ஈரான் அணி தீவிரமாகப் போராடியது. அதன் பலனாக ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் ஒரு அசத்தலான கோலை அடித்து, போட்டியை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
விறுவிறுப்பான இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் நியூசிலாந்து மீண்டும் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் போக்கை உணர்ந்து செயல்பட்ட எலிஜா ஜஸ்ட், தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து நியூசிலாந்து அணியை 2-1 என முன்னிலைக்கு உயர்த்தினார்.
இருப்பினும் ஈரான் அணி சோர்ந்துவிடாமல் தொடர்ந்து மல்லுக்கட்டியது. போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் வலது பக்கத்தில் இருந்து துல்லியமாக உதைத்துத் தள்ளிய பந்தை , ஈரானின் மொஹமட் மொஹேபி மிக நேர்த்தியாக தலையால் முட்டி (Header) கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலையை எட்டியதுடன், இறுதிவரை இதே நிலையுடன் போட்டி முடிவுக்கு வந்தது.
The G-group football match between Iran and New Zealand held in Los Angeles ended in a 2-2 draw. Elijah Just gave New Zealand an early lead, which was later equalized by Iran’s Ramin Rezaeian in the 32nd minute. In the second half, Elijah Just scored again to put New Zealand ahead 2-1, but Iran’s Mohammad Mohebi successfully equalized with a header off a precise cross from Ramin Rezaeian, sealing the match in a tie.