இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் ‘கில்லர்’. இந்தத் திரைப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் இருக்கும் பின்னி மில் வளாகத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இப்படியான சூழலில், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மதன் என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த தினகரன், சூர்யா மற்றும் சக்திவேல் ஆகிய மூவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற (Bomb Blast) காட்சியைப் படமாக்குவதற்காக, சிலிண்டரில் கேஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே ‘கில்லர்’ படப்பிடிப்பின் போதுதான் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் காயமடைந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.